வரமாட்டேன் என்றவர் மீள வந்ததால் சபையில் சலசலப்பு

-யாழ் நிருபர்-

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்பொழுது கடந்த மூன்று அமர்வுகளுக்கு முன்னர், தவிசாளர் சுழிபுரம் சத்தியகாடு சந்தையின் கல்வெட்டு பதிப்பின்போது தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தன்னுடைய சொந்த கட்சி உறுப்பினர்களே தனக்கு ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்து சபையின் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விலகுவதாக தெரிவித்து தவிசாளரை கடுமையாக சாடி சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சிவரஞ்சன் இதயகுமாரன் வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த அமர்வுகளின் போது சபைக்கு தான் வருகை தரமுடியாது என மருத்துவ சான்றிதழை வழங்கிய நிலையில் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பிற்கும் மேலாக குறித்த அனுமதி முறைப்படியான சட்டவியாக்கியானங்களுக்குட்பட்டு தவிசாளரால் ஏற்றுகொள்ளப்பட்ட நிலையில் கடந்த இரண்டு அமர்வுகளுக்கு மேலாக சபைக்கு வருகை தராத நிலையில் இன்று பிரதேச சபையின் அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஆணித்தரமாக சபையில் இருந்து விலகுகின்றேன் என தெரிவித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நபர் மீள சபைக்கு வருகை தந்து மீளவும் தவிசாளரோடு வாக்குவாதப்பட்ட நிலையில் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் குறித்த உறுப்பினரின் செயற்பாட்டிற்கு அதிருப்தி வெளியிட்ட நிலையிலும் அமளி துமளி இடம்பெறவிருந்த நிலையில் சபையின் தவிசாளர் சபையின் நிகழ்ச்சி நிரலை குழப்ப வேண்டாம் என கூறி சபையின் கட்டுக்குள் கொண்டு வந்து தொடர்ச்சியாக சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.