சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ், மட்டக்களப்பு-கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பேரில், முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப்பிள்ளை சதீசன் தலைமையில், சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு, நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு, பல கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் வழங்கவுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் கோட்டைமுனை புற்தரை மைதானத்தில் நடைபெறவிருப்பதனால், ஆடுகளங்களை சிறந்த முறையில் தயார் செய்வதற்கு இவரின் பயிற்சிகள் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட கிழக்கு மாகாணத்தில், புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கும். அவர்களை தேசிய கிரிக்கெட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும். கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ்,
சர்வதேச தரத்தில் இந்த மைதானம் காணப்படுவதுடன், இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
