IMF இலக்கைத் தாண்டிய மேலதிக நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள் -எதிர்க்கட்சி தலைவர்

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் ஈட்டியுள்ள மேலதிக நிதியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், இன்று நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி அரச வருமானத்தை ஈட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% அரச வருவாய் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய நிபந்தனையிட்ட போதும், இன்று அது 15.9% ஆக அதாவது 287 பில்லியன் ரூபாய் அரச வருவாயை ஈட்டியுள்ளது.

ஆரம்ப மீதியும் 2.3 இல் பேணிச் செல்லப்பட வேண்டும் என்ற இலக்குக்கு மாறாக தற்போது 3.8 ஆக அதிகரித்து காணப்படுகின்றன என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழில்முனைவோர், தொழிற்றுறையினர், சேவைகள், நிர்மாணத்துறைகளை வலுப்படுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியம் விதித்த இலக்கை விட அதிகமாக ஈட்டப்பட்ட மேலதிக 0.9% ஐ துறைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிதியைத் திறைசேரியை நிரப்ப மாத்திரமே பயன்படுத்தாமல், நாட்டு மக்களுக்காக முதலீடு செய்யலாம், வரிச் சலுகைகளை வழங்கலாம், வீட்டுவசதிகள் போன்ற கனவைக்கூட நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.