மக்களிடம் இருந்து அன்னியப்படும் அரசாங்கம்

 

-கலாநிதி ஜெகான் பெரேரா-

இலக்கையின் சுதந்திர தினத்துக்கு முதல் நாள் கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் நூல் வெளியிட்டு வைபவம் ஒன்று இடம்பெற்றது. கடந்த நூற்றாண்டில் இலங்கையின் பொதுவாழ்வுக்கு பங்களிப்புச் செய்த ஒரு தந்தையினதும் மகனினதும் சரிகைள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

தந்தையார். ( பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அரசாங்க சபை என்று அறியப்பட்ட ) பாராளுமன்றத்தின் ஒரு முன்னாள் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி. மகன் வெளிநாடுகள் பலவற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவராக பணியாற்றி பிறகு உள்நாட்டுப்போர்க் காலத்தில் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய யோகேந்திரா துரைசுவாமி.

யோகேந்திராவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர் எனது நல்ல நண்பர். தமிழ் மக்களினதும் பொதுவில் நாட்டு மக்களினதும் நலன்களைப் பாதுகா்பதற்கு அகிம்சை வழியும் விட்டுக்கொடுப்புமே சிறந்த வழி என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

நூல் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதிய ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் ‘ கிழக்கின் சுவிட்சர்லாந்தாக ‘ மாறக்கூடிய ஆற்றலைக் கொண்டதாக இலங்கையைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது சுதந்திரத்தின் ஆரம்பகால எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளின் அனுபவத்தைக் கொண்டவர்கள். அடுத்து வந்த தசாப்தங்களில் அந்த நம்பிக்கைகள் படிப்படியாக இல்லாமற்போய் முதலில் தெற்கையும் பிறகு வடக்கையும் வன்முறை ஆக்கிரமித்த காலப்பகுதியையும் அவர்கள் கடந்து வந்தார்கள்.

வைபவத்தின் இசையும் அலங்காரமும் தமிழ் கலாசாரப் பாரம்பரியத்தில் அமைந்திருந்தாலும் பிரிவினை அல்லது பிளவு உணர்வு எதுவும் இல்லை. தமிழிலும் சிங்களத்திலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இத்தகைய ஒரு அரசியல் சமுதாயம் போருக்கு போகிற அளவுக்கு பிளவுண்டதை கறனபனை செய்துபார்ப்பதே கஷ்டமாக இருந்தது.

வைபவத்தில் ஒட்டுமொத்த உணர்வு ஐக்கியத்தையும் தோழமையுணர்வையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த உணர்வுகளை அடையாளப்படுத்துவதாக வைபவத்தின் இறுதியில் இசைக்கப்பட்ட தேசியகீதம் அமைந்தது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் சரிதை வேறுபட்ட ஒரு காலத்தையும் வேறுபட்ட ஒரு இலங்கையையும் எடுத்துக்காட்டியது. 1911 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலனித்துவ சட்டசபைக்கு தனியொரு பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கான உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்கள்.

முதல் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சேர் மார்க்கஸ் பெர்னாண்டோவை சேர் பொன்னம்பலம் இராமநாதன் தோற்கடித்தார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு சபாநாயகர் தெரிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான சேர் சிறில் டி சொய்சா கே.சி.யை தோற்கடித்து அதே சரித்திரம் திரும்ப நிகழ்வதை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி உறுதிசெய்தார். இரு சந்தர்ப்பங்களிலுமே வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள். ஆனால் அவர்கள் தமிழர்களுக்கு வாக்களித்தார்கள். (சொய்சா பிறகு ஒரு கட்டத்தில் செனட் சபையின் தலைவரானார்.)

சுருங்கிப்போன அரசியல் சமுதாயம்

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 76 வருட நிறைவை எமது கடந்த காலத்தின் சிறப்புகளை மீளிணைக்க இயலாத முறையிலேயே அரசாங்கம் கொண்டாடியது.
நாடெங்கும் தேசியக்கொடிகள் பெருமளவில் பறக்கவிடப்பட்டு தேசிய உணர்ச்சியோ அல்லது தேசபக்தியையோ பரந்தளவில் வெளிக் காட்டப்படவில்லை. தவறான ஆட்சிமுறை மற்றும் விரயம் காரணமாக மூண்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுதந்திரதின அணிவகுப்பையும் கூட மட்டுப்படுத்தவேண்டியிருந்தது.

ஒரு பக்கத்தில் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தார்கள். மற்றப்பக்கத்தில் கடற்கரை வரை காலிமுகத்திடல் பசுந்தரை நீண்டுவிரிந்து கிடந்தது. மக்களைக் காணமுடியவில்லை. கலந்துகொள்வதை அவர்கள் தவிர்த்தார்கள். தங்களின் குடும்பங்கள் பட்டினியில் உழலுகின்ற ஒர நேரத்தில் காலிமுகத்திடலுக்கு வந்தால் அரசாங்கம் நடத்திய அணிவகுப்பைக் கண்டு எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டிவரலாம் என்று மக்கள் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

அதன் விளைவாக, நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளையும் இசையையும் நடனங்களையும் சுதந்திரதின கொண்டாடடங்களில் காணமுடியவில்லை. அதற்கு பதிலாக இராணுவப் பிரிவுகளின் நிகழ்ச்சிகளையே காணக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மைக் கலாசாரத்தின் ஒரு அடையாளமாக பொன்னிறத்திலான சிங்க ஊர்தி வீதியில் இழுத்துவரப்பட்டது. நாட்டின் பல்வகைமையின்
மூலைக்கல்லான அரசியல் சமுதாயத்தின் வளத்தையும் காணக்கூடியதாக இருக்கவில்லை.

இன,மத சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட நாட்டின் எதிரணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சுதந்திரதின கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. அரசாங்கம் பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுவருவதை சுதந்திரதின நிகழ்வு அம்பலப்படுத்தியது. அரசாங்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு படைகள் மீது அது கொண்டிருக்கும் கட்டுப்பாடு மாத்திரமே விளங்குகிறது.

அன்றைய தினம் பெருமளவு சலுகைகளையும் பயன்களையும் படையினரே பெற்றனர். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 211 அதிகாரிகளுக்கான பதவியுயர்வுகளையும் இராணுவத்தின் ஏனைய தரங்களைச் சேர்ந்த 1,239 பேருக்கான பதவியுயர்வுகளுக்கும் ஜனாதிபதி அங்கீகாரத்தை வழங்கினார். இவ்வாறு செய்வது சுதந்திரதினங்களின்போது வழமையாகும். கடந்த வரும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 208 அதிகாரிகளுக்கும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 7,790 பேருக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டன.

எதிர்ப்பை ஒடுக்குவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரங்களைப் படிப்படியாக திட்டமிட்டமுறையில் அரசாங்கம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ‘தடைசெய்யப்பட்ட ‘ உள்ளடக்கங்களை மதிப்பிடுவதற்கும் நீக்குவதற்குமான பரந்தளவு அதிகாரங்களைை இணையவெளி பாதுகாப்பு சட்டம் கொண்டிருக்கிறது.

இந்த சட்டம் ‘ இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் பற்றிய தவறான அறிக்கைகளை’யும் ‘மத உணர்வுகளைப் புண்படுத்தும் வெளிப்படையான நோக்கத்துடனான அறிக்கைகளை’யும் உட்பட பல்வேறு விடயங்களை தடுப்பதற்கு பரந்தளவில் அதிகாரத்தைக் கொண்டதாக இந்த சட்டம் அமைந்திருக்கிறது. தடைசெய்யப்பட்டவை என்று சட்டம் கூறுகின்ற விடயங்களை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவே வியாக்கியானம் செய்யும்.

அடுத்து அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுலனங்கள் சட்டம் ஆகியவை தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் அபிப்பிராயங்களும் நாட்டின் இறைமைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டவையா இல்லையா என்பதையும் தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடியவையா இல்லையா என்பதையும் அரசாங்கத்தினால் நியமிக்கப்படுபவர்களுக்கு வழங்கும்.

புதிய அன்னியமயமாதல்

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கிலும் கிழக்கிலும் மீண்டும் கறுப்புக்கொடிப் போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இது நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னரான முதலாவது தசாப்தம் முதல் தீவிரமடையத் தொடங்கிய இனநெருக்கடியின் பொதுவான ஒரு போக்காக இருந்து வந்திருக்கிறது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழர்களின் பிரதிநிதிகள் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவுடன் முழு அரசியல் சமுதாயத்தையும் பிரதிநிதித்துவம் செய்த ஒரு காலம் இருந்தது. அந்த தமிழ் மக்கள் இப்போது அன்னியப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.

சதந்திரத்துக்கு பிறகு சனத்தொகையின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டதையடுத்து தமிழர்கள் அதிகாரமிழந்த சிறுபான்மைச் சமூகமாகிப் போனார்கள். இது அவர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடக்கூடிய ஒரு நிரைவரம் அல்ல. அவர்களைப் போன்றே இப்போது சிங்களவர்களும் ஏனைய சமூகத்தவர்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக வந்தபோது ரணில் விங்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழியைக் காப்பாற்றத் தவறியமை பெரும் ஏமாற்றம் தருவதாகும்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதாக அவர் உறுதியளித்தார். இப்போது 76 வது சுதந்திரதினமும் கொண்டாடப்பட்டுவிட்டது. ஆனால் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு அதிகாரங்களை பரவலாக்கும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தைக் கூட நடைமுறப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வருவதாக இல்லை.

இவ்வாறாக உறுதிமொழியைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியதனால் இன,மத சிறுபான்மைச் சமூகங்கள் மாத்திரம் தான் ஏமாற்றமடைந்திருக்கின்றன என்றில்லை. எதிரணி அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள்,ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களை பொருட்படுத்தாமல் இணையவெளி பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய முறை ஜனநாயகம் மீதான அரசாங்கத்தின் கடப்பாட்டையும் பற்றுறுதியையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இணையவெளி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய பிறகு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் பிடிவாதமாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் நாட்டம் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத அனைய சகல துறைகளுக்குமான ஜனநாயக வெளியை மூடிவிடும் நோக்கத்தைக் கொண்டதாகும். அதன் விளைவாக அரசாங்கத்துடன் திறந்த அரசாங்க பங்காண்மையில் பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகள் அந்த செயன்முறையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருக்கின்றன.

இதே போன்ற விசனம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டமூலத்தின் விடயத்திலும் இருக்கிறது.

‘மிக முக்கியமான கலாசார விழுமியங்களையும்’ ‘ பொது ஒழுங்கின் பாதுகாப்பயைும் நலன்களையும் ‘ பாதிப்பதாகக் கருதப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தனிப்பட்ட அரசாங்க சார்பற்ற அமைப்புக்களை இடைநிறுத்துவதற்கும் மூடுவதற்கும் வகைசெய்யக்கூடியதாக அந்த சட்டமூலத்தின் வரைவு அமைந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பெரிய எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது. அதற்கு எதிராக தன்னைப் பாதுகாக்க அரசாங்கம் தயாராகிறது.