
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 6 ஆவது வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை கறுவாக்கேனி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் விசேட பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பால்குடங்களை தலையில் சுமந்தபடி பால்குடபவனியாக ஆலயத்தினை சென்று தமது நேற்றிக்கடனை செலுத்தினார்கள்.
தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ நிகழ்வுகள் யாவும் நடைபெற்று எதிர்வரும் 02.09.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் மாலை திருவூஞ்சல் காட்சியும், கொடியிறக்கமும் நடைபெறும்.
இதேவேளை இவ் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளது.
அவையாவன 2ஆம் நாள் புஸ்பாஞ்சலி உற்சவம், 3 ஆம் நாள் வேதபராயண உற்சவம், 4 ஆம் நாள் சமங்கலி பூசை, தீபப் பூசை, 5 ஆம் நாள் மாம்பழத் திருவிழா, 6 ஆம் நாள் நத்தன கணபதி உற்சவம், 7 ஆம் நாள் திருவேட்டைத் திருவிழா, 8 ஆம் நாள் சப்பறத் திருவிழா, 9 ஆம் நாள் காலை சுவாமி தேரில் எழுந்தருளல், மாலை கற்பூரச் சட்டி திருவிழா 10 நாள் தீர்த்தத் திருவிழாவும் மாலை திருவூஞ்சல் காட்சியும் கொடியிறக்கமும் நடைபெற்று விழா இனிதே நிறைவு பெறவுள்ளது.
திருவிழாக்கள் யாவும் ஆலய தலைவர் ஞா.பேரின்பராசா தலைமையில் ஆலய குரு கிரியாகிராம ஜோதி ஈசான சிவச்சாரியார் சிவஸ்ரீ க.மகேந்திரராஜா குருக்களின் வழிகாட்டலில் மஹோற்சவ பிரதம குரு அலங்கார பூசணம் கிரியாஜோதி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.த.லிங்கேஸ்வர குருக்களினால் நடாத்தப்படும்.
திருவிழாக் காலங்களில் அடியார்கள் ஆலயம் வருகை தந்து வழிபட்டு திருவருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர்.