
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்றனர்
-யாழ் நிருபர்-
சட்டத்துறையினை விட அரசியலினை விட துடுப்பாட்டத்திலே ஆர்வம் உடையவன் நான் துடுப்பாட்டம் ஆரம்பமான காலத்திலே துடுப்பாட்ட வீரர்கள் பணத்திற்கு விளையாடுவது இல்லை விளையாடுவதற்கு வேதனம் கொடுக்கப்பட்டால் இழிவான செயலாக கருதப்படும்.
விளையாட்டுக்கு பணம்கொடுப்பது என்பது வெறுக்கத்தக்கவிடையமாக கருதப்பட்டது. அதனையும் தாண்டி ஏலத்திலே விளையாட்டு வீரர்கள் வாங்கி விற்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையும் வந்து இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழி அமைப்பின் ஒருங்கிணைப்பில் யாழ். மாநகர சபையின் இணைய எற்பாட்டில் பிறைடர்ஸ் பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நச்சிமார் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்துறையிலும் சட்டத்தரணிகள் மனுதாரர்களிடம் இருந்து காசுவாங்காமல் நீதிமன்றத்தில் வழக்கினை தொடங்க வேண்டிய நிலை ஆரம்பகாலத்தில் இருந்தது.
சில நாட்களுக்கு முன்னார் ஏல விற்பனையினையும் அரசியலில் கண்டு இருப்பீர்கள். ஆரம்பத்திலே நாடாளுமன்றத்திற்கு போகின்றவர்கள் வேதனம் கொடுப்பது இல்லை சேவைதான் செய்யவேண்டும்.
பிரித்தானியா நாடாளுமன்ற மரபுகளை கொண்ட புத்தங்களை படிக்கின்றபோது அது சேவையாகத்தான் இருக்கும்.
அதன்பின்னர் பிரயாணத்திற்காக வேதனம் கொடுக்கப்படுகின்றது. இலங்கையிலும் அவ்வாறுத்தான் ஒவ்வொரு அமர்வுக்கும் வந்து போவதற்குத்தான் வேதனம் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்பொழுது எமக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது. இல்லை சம்பளம் என்ற பெயரில் ஏதோ கொடுக்கின்றார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்றனர், என்றார்.
இதில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தலைவர் ஏ. நிலாந்தன், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ். மாநகர ஆணையாளர் ரீ.ஜெயசீலன் மற்றும் துடுப்பாட்டத்தின் உறுப்பினர்கள் யாழ் மாவட்ட 12 லீக் துடுப்பாட்டத்தின் நிர்வாக குழுவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.