முறைப்பாட்டை விசாரிக்க சென்ற 2 பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு

அல்பிட்டிய – பிட்டிகல – தல்கஸ்பே – மனனஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டைக் கேட்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சந்தேகநபர் தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிடிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அவ்வேளை சந்தேகநபர், பொலிஸ் பரிசோதகரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், அதன் போது பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சந்தேக நபரை சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் மீது 2 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் தற்போது எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24