பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல்
-பதுளை நிருபர்-
பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் நேற்றிரவு இருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் உந்துருளியில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர் பெற்றோல், டீசல் இரண்டு நாட்களாக இல்லை என்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக கூறியுள்ளார்
இதன் போது மீண்டும் பெற்றோல் தமது உந்துருளிக்கு செலுத்துமாறு கூறி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை உந்துருளியில் வந்த நபர்கள் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊழியர் கூக்குரல் இட்டபோது எரிபொருள் நிரப்பு நிலைய சக ஊழியர்களால் தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, தாக்குதலுக்கு உள்ளான 38 வயதுடைய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.