டிட்வா மறுசீரமைப்பு – அநுரகுமார திஸாநாயக்க
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளை சீரமைக்கும் பணிகளுக்காக அரசாங்கம் ஒரு சதம் கூட கடன் வாங்கவில்லை எனவும், பணத்தை அச்சிடவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான “ஒன்றிணைந்த தேசம்” (Nation United) தேசிய வேலைத்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் ஒரு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான மறுசீரமைப்புப் பணிகளுக்காக அரசாங்கம் 500 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
அரசாங்கத்தின் திறைசேரிக் கணக்கில் 1,200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை காணப்பட்டது.
அதிலிருந்தே மறுசீரமைப்புப் பணிகளுக்காக 500 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1.2 டிரில்லியன் ரூபா) என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4 சதவீதமாகும்.
“நாங்கள் நிதி ஒழுக்கத்தையும் பொருளாதாரக் கொள்கைகளையும் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கி நகர முடிகிறது. பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகள் இன்றி இத்தகைய சேதங்களை எதிர்கொள்ளும் நிலையை நாம் உருவாக்கியுள்ளோம்,” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
