புறப்பட்ட சிறிது நேரத்தில் 55 பயணிகளுடன் கடலில் வீழ்ந்து விமானம் விபத்து!

சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள ஏடன் அத்தே சர்வதேச விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்டார்ஸ்கை (StarSky) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்து சமுத்திரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போதிய உயரத்திற்குப் பறக்க முடியாமல் சிரமப்பட்டதை அவதானித்த விமானி, மீண்டும் அதனை விமான நிலையத்திற்குக் கொண்டுவர முயற்சித்துள்ளார்.

இருப்பினும், தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி, கடற்கரையோர ஆழமற்ற கடல் பகுதிக்குள் பாய்ந்தது.

இந்த மோதலின் வேகத்தில் விமானத்தின் ஒரு சிறகு முற்றாக உடைந்து தனியாக மிதந்த போதிலும், விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்னரே பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேறினர்.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டதால், விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 55 பேரும் எவ்வித காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

விபத்தின் போது விமானம் கடலில் விழுந்ததும் பயணிகள் தண்ணீருக்குள் குதித்துத் தப்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஏடன் அத்தே சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.