
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா – ஐரோப்பா இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தாண்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை (Tariffs) விதிக்கப் போவதாக விடுத்துள்ள மிரட்டல், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பங்குகளை விடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, வர்த்தகப் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவடைந்து வருவதும், தங்கத்தின் விலையேற்றத்திற்கு மற்றுமொரு காரணமாகக் கூறப்படுகிறது.
நேற்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் 4,730 டொலர்களாகக் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் 4,800 டொலர்களைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில், நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு பின் 2000 ரூபாயால் அதிகரித்து 370,000 ரூபாயாக, விற்பனையானது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
