
தமிழக முதல்வரை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இலங்கை மற்றும் தமிழ்நாட்டு அரசுகளின் உறவுளை வலுப்படுத்துமுகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதியமைச்சர் பிரதீப் தனது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாசார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் சென்னையிலுள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார்.
இலங்கையில் கடந்த 27ம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.
பேரிடரிலிருந்து இலங்கை மீண்டெல இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின.
காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமான விளக்கத்தினை வழங்கவும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலைய மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தவும் அதேநேரம் தமிழக அரசின் குறுகிய கால நீண்டகால ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடவும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதிமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சென்னையில தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உத்தயோகபூர்வமாக சந்தித்தார்.
