
ஹட்டன் – சிங்கமலையில் காட்டுத்தீ பரவல்
ஹட்டன் சிங்க மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கர் காடு சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்லி தோட்டத்தின் வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ சிங்கமலை வனப்பகுதியில் பரவியுள்ளது.
சிங்கமலை வனப்பகுதியானது ஹட்டன் நகரிற்கு நீர் வழங்கும் பிரதான வனப்பகுதியாகும். தொடர்ந்து இவ்வாறான தீ பரவலில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என நகர மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அடர்ந்த காட்டில் வறண்ட காலநிலை காரணமாக மிக வேகமாக தீ பரவியதால் பல ஏக்கர் காடு எரிந்து நாசமாகியதாக ஹட்டன் வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனம் தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் காடுகளுக்கு தீ வைப்போர் தொடர்பில் அறியத் தருமாறு பொது மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.