மன்னார் வைத்தியசாலையில் தாய் – சிசு மரணம் : நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குறித்த வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணின் மரணத்தின்போது, கடமையிலிருந்த வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று மாலை பிரவேசித்த மாவட்ட அரசாங்க அதிபர் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடமும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசவத்துக்காக நேற்றைய தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜஸ்ரீ (வயது 28) என்ற பெண் உயிரிழந்ததுடன், அவரால் பிரசவிக்கப்பட்ட சிசுவும் உயிரிழந்தது.

இந்நிலையில், வைத்தியர்களின் கவனயீனம் காரணமாகவே தாயும் சிசுவும் மரணித்ததாகக் குறித்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதிக்கு முன்பாக நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில் அங்குப் பதற்றம் நிலவியிருந்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கமைய, அமைச்சின் செயலாளரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழு இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்