அற்றோனித்தத்துவத்தை பயன்படுத்தி மோசடி: அரச ஊழியர் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்-

கனடாவைச் சேர்ந்த நபரொருவர், மானிப்பாயில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு அற்றோனித்தத்துவ அதிகாரத்தை வழங்கியிருந்த நிலையில், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அற்றோனித்தத்துவ அதிகாரங்கள் வழங்கப்படாத சில ஆதனங்களும் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களான அரச ஊழியர் ஒருவர் உட்பட இருவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், அந்த உறுதியின் மீதான தமது பொறுப்புகளைத் துறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகள், வீடுகள் மற்றும் ஆதனங்கள் தொடர்பில் வழங்கப்படும் அற்றோனித் தத்துவ அதிகாரங்களைப் பயன்படுத்தி மோசடியான முறையில் காணி உரிமை மாற்றங்கள், கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என்றும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.