இலங்கைக்கு கடல் வழியாக தப்ப முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

-மன்னார் நிருபர்-

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று செவ்வாய் கிழமை இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான சாந்தி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கணேசன் லிங்கம் ஆகியோரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து ராஜேஸ்வரனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசலிங்கம் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த நவீத் இம்ரானை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து இன்று புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியாவுக்கு தப்பி வர திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்