வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக இணையும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அங்கு வாகன சாரதிப் பரீட்சையில் சித்தியடைய முடியாமல் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
200 இலங்கையர்கள் இந்த மோசடி முறையின்கீழ் டுபாய் சென்றுள்ளனர்.
இவர்களில் சிலர் தேவையான திறன்கள் இல்லாமல் அங்கு சென்றுள்ளனர்.
இன்னும் சிலர் சாரதி தேர்வில் தேவையான பயிற்சிகளை பெற்றிருந்தும் டுபாயில் தோல்வியடைந்துள்ளனர்.
அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள் என தெரிவித்த அமைச்சர், அவர்களை மீள அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
