மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி – மூவர் காயம்

-பதுளை நிருபர்-

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் மீகஸ்பிடிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தல்தென 6 ஆம் கட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தியத்தலாவையில் இராணுவத்தினருக்கு சொந்தமான ஸ்கெமனர் ரக பார ஊர்தி ஒன்று பல்லேகல பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை பதுளை மஹியங்கனை வீதி மீகஸ்பிடிய பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த அசலக பகுதியைச் இருவரும் பார ஊர்தியின் சாரதியான இராணுவ பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரரும் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பார ஊர்தியில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மூவர் பார ஊர்தியில் இருந்து கீழே குதித்து எதுவித காயங்களும் இன்றி தப்பித்துள்ளதாகவும் விபத்துக்கான காரணம் பார ஊர்தியின் தடை இயங்காமையே என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.