120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு டொலர் இல்லை
ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நுரைச்சோலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் உரிய தொகையை செலுத்தாவிட்டால், சரக்குகளை இறக்காமல் புறப்படுவோம் என தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமானது நிதிப் பற்றாக்குறை காரணமாக, 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறு நாட்களுக்கான அதிக அபராதத்துடன் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தற்போதுள்ள நிலக்கரி மின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரலுக்குப் பின்னர், தென்மேல் பருவ நிலை ஆரம்பிப்பதால் அடுத்த தொகுதி நிலக்கரி செப்டெம்பர் மாதமே கொண்டுவரப்படும் எனவும் இந்த மாத கடைசிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த நிலக்கரி இறக்குமதி செய்யும் காலம் தொடங்கும் வரை, கையில் இருக்கும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்காக லக்விஜய மின்நிலையத்தில் உள்ள 300 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தொகுதியை குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு மூடுவதற்கு மின்சாரசபை நிர்பந்திக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மின்வெட்டுக் காலத்தை நீட்டிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.