12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர்

ஆப்பிரிக்க நாடான கானாவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது மத போதகர் 12 வயது சிறுமியை கடந்த சனிக்கிழமை மணமுடித்துள்ளார்.

கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே மணமுடிக்கலாம். இருப்பினும் சமய சடங்குகளை முன்னிறுத்தி 12 வயது சிறுமியை நூமோ பார்கடே லாவே சுரு எனும் 63 வயது மத போதகர் திருமணம் செய்துள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கானா அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பினர்.

தற்போது மணமுடிக்கப்பட்ட சிறுமிக்கு 6 வயது ஆன போதே இத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை சிறுமிக்குக் கல்வி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இது சமய சடங்கு சார்ந்த திருமணமே அன்றி வேறில்லை என்று சிலர் தெரிவித்தனர்.

ஆனால், விசாரணையில் அச்சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.