100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிராக தாக்குல் நடத்த ஆரம்பித்தது.

தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சில ரஷ்யாவினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த நகரங்கள் முழுமையாக ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து இதுவரையில் உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் வரை அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்படி போலந்து நாட்டில் மட்டும் 36 இலட்சம் பேர் வரையில் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைனின் பொதுமக்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்

சுமார் 700 சிறுவர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், 139 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உக்ரைனில் நாளாந்தம் 2க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்படுவதாகவும், 4 இற்கும் அதிகமானோர் காயமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.