கல்முனையில், வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்த 56 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை கல்முனை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4-ஆம் மாடி மொட்டை மாடியில், சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா தோட்டத்தை பொலிஸார் கடந்த புதன்கிழமை அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், அவற்றைச் சான்றுப் பொருட்களாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










