-கிளிநொச்சி நிருபர்-
வீட்டு அத்திவாரம் தோண்டும் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்படும் நிலையில், வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிடுகின்றனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தாநகர் பகுதியில் குடியிருப்பதற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைக்க வீட்டார் பணிகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த 11ம் திகதி வீட்டுக்கான அத்திவாரம் தோண்டும் போதுஇ அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
இந்த நிலையில், கிராம சேவையாளர் ஊடாக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை குறித்த குண்டு அகற்றப்படாமையால் வீட்டுரிமையாளரும், அப்பகுதி மக்களும் அச்சம் வெளியிடுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், முறைப்பாட்டினையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தினர் என பல தரப்பும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட போதிலு்ம, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.