லண்டனில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

-யாழ் நிருபர்-

தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா லண்டனில் கடந்த ஞாயிறு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டாடும் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம்(TCC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம்(CCD) ஆகியன இணைந்து தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வினை ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் நியூ மோல்டன் பகுதியில் கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மற்றும் மயிலாட்டம் குதிரையாட்டம் புலியாட்டம் கரகாட்டம் என தமிழர்களின் கண்கவர் கலைகளுடன் நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களின் பல்வேறு கலை பாரம்பரிய நிகழ்வுகளுடன் மரபுத் திங்கள் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது.