மினுவாங்கொடை அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பொருட்கள்

மினுவாங்கொடை அழகு நிலையமொன்றில் பெண்ணொருவருக்கு பூசப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டு தலைமுடி உதிர்ந்த சம்பவத்தையடுத்து நேற்று புதன் கிழமை மினுவாங்கொடை நகரில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட பிரிவு தெரிவித்துள்ளது.

இறக்குமதி விவரங்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விற்பனையிலிருந்து தடைசெய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களை உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் இன்றி அதிக விலைக்கு விற்பனை செய்த 14 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு சிகிச்சைகள் செய்யப்பட்ட சலூன்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக மினுவாங்கொட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.