மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கு பேரவையின் ஆதரவுடன் பேசாலை மீனவ கூட்டுறவு சங்கம், விக்ரரிஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் பேராதரவுடன் வெற்றியின் சிறகுகள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘மே தின’ விளையாட்டு போட்டிகளின் அங்கமாக கரப்பந்தாட்ட போட்டி இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது.

பேசாலை புகையிரத வீதியில் உள்ள மைதானத்தில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் உதவி பங்குத்தந்தை மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு மின்னொளி இரவு நேர போட்டியாக இடம்பெற்று வருகின்றது.

மீனவ மக்களைக் கொண்ட பேசாலை கிராமத்தில் மே தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பெரும் தொற்று காரணமாக மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் தடைப்பட்டிருந்த போதும் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடும் நோக்கில் போட்டி இடம்பெற்று வருகின்றது.

நாளை மே தின விசேட திருப்பலி கடற்கரையில் இடம்பெற இருப்பதுடன் கடல் மற்றும் கடல் தொழில் கலங்கள் மீன்பிடி உபகரணங்கள் பாரம்பரிய முறைப்படி ஆசீர்வதிக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.