மன்னாரில் கடையடைப்பு-வழமைபோல் மக்களின் இயல்பு நிலை

-மன்னார் நிருபர்-

வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த ராணுவ பிரசன்னத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் ,வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ள போதும் மக்களின் இயல்பு நிலை வழமை போல் காணப்படுகிறது.

மேலும் வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இப் போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும்,அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் மன்னாரில் பஜார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப் பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு

மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்பும் இன்றி வழமை போல் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 

மன்னாரில் கடையடைப்பு-வழமைபோல் மக்களின் இயல்பு நிலை
மன்னாரில் கடையடைப்பு-வழமைபோல் மக்களின் இயல்பு நிலை