மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

-பதுளை நிருபர்-

பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இடம்பெயர்ந்து ஹொப்டன் 19 ஆம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் 105 குடும்பங்களும், கொஸ்கொல்ல பகுதியில் 10 குடும்பங்களுமாக 115 குடும்பங்களை சேர்ந்த 400 பேர் ஹொப்டன் 19 ஆம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழும்புவத்தை கிராம சேவகர் பிரிவில் வெவ்பிடிய கிராமத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்து தொழும்புவத்தை ஜெயந்தி வித்தியாலயத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொனராகலையில் சிறிகல பகுதியில் 16 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக மொனராகலை யொஹான் சேனா நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மொனராகலை சிறிகல பிரிவின் கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.