மட்டக்களப்பு நெடியமடு பகுதியில், ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக, நீர்ப்பாசன திணைக்களம் வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம், உன்னிச்சை குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்காக, நீர்ப்பாசன திணைக்களம் குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளது
எனினும் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று பகல் 11.00 மணியளவில், குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்துள்ளார்.
சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் நிர்மாணம் பணியின் போது, அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
உயிரிழந்த சிறுவன் மட்/மமே/உன்னிச்சை 6ம் கட்டை அ.க.த பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்று வந்தவர் என தெரிய வருகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










