மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி, அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிரான்குளம் விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த, அமரசிங்கம் பரமலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில், சம்பவ தினமான இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில், மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று, மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.
இதன்போது, செல்வகுமார் (வயது 45) என்பவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இருவர் காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காணாமல் யோனவர்களில் ஒருவரான மீனவர் சங்க தலைவரான நாகேந்திரன் என்பவரை தேடும் நடவடிக்கையில், மீனவர்கள் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










