-ச.சந்திரபிரகாஷ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவுகள் சென்றடைய வேண்டும் என்பதில் இரவு பகல் பாராது தமது கடமைகளை செய்து வரும் பொதுச் சுகாதார பரிசோதர்களை இலக்கு வைத்து தற்போது பல்முனை தொழில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதை கடந்த கால பல சம்பவங்கள் மூலம் அறிய, காணக்கூடியதாக உள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் கடந்த காலங்களில் பலவடிவங்களில் இடம்பெற்றிருந்தாலும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் ஒருவரை திட்டமிட்டு, அதுவும் பட்டப்பகலில் சினிமா பாணியை மிஞ்சிய நிலையில் நடத்தப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செங்கலடி பிராந்திய சுகாதார வைத்திய பிரிவிற்கு உட்பட்ட, ஏறாவூர் 4ஆம் குறிச்சி பாடசாலை வீதியில் உள்ள பொதுச் சுகாதார காரியாலயத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 52 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகர் பயன்படுத்தும் கருப்பு நிற மோட்டார் சைக்கிள் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள வீதியோரத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த போது, இரு சிறிய பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் ஒரு திட்டமிடலின் உச்சகட்டம் என்று கூட சொல்ல முடியும்.

பின்பக்கப் பார்வை கண்ணாடியின் முன்பக்கத்தில் ஏற்பட்ட சிறிய வெடிப்பு அல்லது ஒரு துவாரத்தை தற்காலிகமாக மறைத்திருப்பது போல் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் கருப்பு நிற சேலோடேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து ஏறாவூர் தமிழ் பிரிவில் 2021ஆம் ஆண்டு முதல் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகரின் தனிப்பட்ட பாதுகாப்பு நலன் கருதி மட்டக்களப்பு சுhகார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மட்டக்களப்பு அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பின்பக்க பார்வைக் கண்ணாடியின் முன்பக்கம் ஏன் தேர்வு செய்யப்பட்டது..?
மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முன்பக்கத்தை கவனிப்பது மிகவும் குறைவு என்பதாலும் , எப்போதும் சிறிய விபத்துக்கள் ஏற்படும் போது, பக்கப்பார்வை கண்ணாடியே முதலில் பாதிக்கப்படுவதால் இதனை தமக்கு சாதகமாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதில் ஒருவிடயம் தெளிவாக தெரிகின்றது, குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரை “சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு நேற்று முடிவெடித்து இன்று நடத்தப்பட்ட சம்பவம் போல் இது தெரியவில்லை”, மிக நீண்ட நாட்களாக இவரை பின்தொடர்ந்து, நோட்டமிட்டு ஒரு குறுகிய நேர சந்தர்ப்பத்திற்காக, காத்திருந்த சதிவலை போல்தான் இது புலப்படுகின்றது.
இவ்வாறு சந்தேகிக்கப்பட வேண்டிய முக்கிய காரணி, குறித்த பொது சுகாதார பரிசோதகர்; அலுவலகத்திற்கு செல்லும் போது நீண்ட நேரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்துவதானால் அலுவலக உள்வளாகத்தினூள் நிறுத்துவதை வழமையாக கொண்டிருந்தார்.

சம்பவ தினமான ஒக்டோபர் 27ஆம் திகதி பணிமனையில் தாய்சேய் நலன்சார்ந்த சுகாதார பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அதிகளவானவர்கள் இங்கு கூடியிருந்தமையினால் இவரால் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை இதனால் வெளியே நிறுத்தி வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி “ஐஸ்” போதைப் பொருள் கடத்தலில் அல்லது விற்பனையில் இவர் ஈடுபட்டார் என்று இவர் மீது பழியை போட்டு இவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து பதவியை பறிப்பதே நீண்டநாள் முயற்சியாக இருந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது.
இவர் மீது ஏன் இந்த வன்மம், இதன் பின்னணி என்ன..?
மட்டக்களப்பு, ஏறாவூர் – செங்கலடி பிரதான வீதியில் இயங்கி வரும் உணவகங்கள் மீது கடந்த காலங்களில் இவரால் நடத்தப்பட்ட பல இறுக்கமான சுகாதார சோதனைகளின் ஒரு வெளிப்பாடாக இச்சம்பவத்தின் பின்னணி இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது , சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையால் பல வழக்குகள் போடப்பட்ட உணவகங்கள் குறித்த விசாரணையில் ஒரு உணவகத்தின் மீது பொலிசாரின் முதலாவது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
இந்த நிலையில் ஒரு உணவகத்தில் 2024ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதயில் நடத்தப்பட்ட சுகாதார சோதனையின் போது, தமிழ் பிரிவைச் சேர்ந்தவர்கள் இங்கு சோதனை நடத்த முடியாது என முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன, இதன் தொடர் நிகழ்வுகளே குறித்த சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றது.

பொது மக்களுக்கு சுத்தமான , சுகாதாரமான உணவுகள் சென்றடைய வேண்டும் என்பதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் கடுமையாகவும் , சுறுசுறுப்பாகவும் செயற்படுகின்ற போதிலும், இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும் ஒருசில உணவக பண முதலைகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களால் தமது பணிகளை செய்வதில் கடின கட்டத்தில் உள்ளதாக, இப்பகுதிகளில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்ட போது தெரிவித்தனர்.
இதிலும் குறிப்பாக தமிழ் – முஸ்லிம் எல்லைகளில் காணப்படும் உணவகங்களில் சுகாதார சோதனைகளில் ஈடுபடும் போது, முக்கியமாக எல்லை பிரச்சனைகள் முன்வைக்கப்படுவதால் தமிழ், முஸ்லீம் சுகாதார அதிகாரிகள் பல்தரப்பட்ட பிரச்சகைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தில் இருவர் கைது, தொடரும் விசாரணையும்..?
இச்சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அலுவலகத்திற்கு அருகில் நின்று கொண்டு கொண்டிருக்கும் நிலையில், மற்றைய நபர் வேலையை கச்சிதமாக முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச்செல்லும் காட்சிகளை அருகில் இருந்த சிசிரிவி காட்சிகள் மூலம் காணக் கூடியதாக இருக்கின்றது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 46 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் , இந்த சம்பவம் ஒரு தூண்டுதலின் பேரில் இடம்பெற்றுள்ளதாக சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையாக கொண்டு தாம் சந்தேகிக்கப்பதாகவும், விசாரணைகள் முடியும் வரை இரகசியத்தன்மை பேணப்படுவதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 29ஆம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 30ஆம் திகதி ஏறாவூர் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் குறித்த சுகாதார பரிசோதகரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
சுகாதார அதிகாரிகளின் இறுக்கமான சுகாதார கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட தொழில் வன்மத்தினால் இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இருந்த போதிலும் வேறு பல கோணங்களிலும் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நேர்மையாக தமது கடமைகள் செய்யும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை இலக்கு வைத்து இது போன்ற வேறு சம்பவங்கள் , அல்லது உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் சம்பவங்களும் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதால் குறித்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.










