
பொருட்களின் விலை கூட்டி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-கல்முனை நிருபர்-
மட்டு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் முட்டை உட்பட அன்றாட பொருட்களின் விலையேற்றமும் அதிகரித்துச் செல்கின்றது.
இதனால் சாதாரண மக்கள் தங்களது வயிற்றுப் பசியை கூட தீர்க்கமுடியாது வறுமையில் சிக்கித்தவிக்கின்றனர்.
இன்றைய பொருளாதார நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வர்த்தகர்கள், வியாபாரிகள் கட்டுப்பாட்டு விலைகளை மீறி அவரவர்கேற்ப பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.
மட்டு அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல கடைகளில் விலைப்பட்டியல் கூட காட்சிப்படுத்தப்படாதுள்ளது.
ஒரு பொருளுக்கு பல விலைகள் சொல்லப்படுகின்றது.
இதனையிட்டு பொருட்களை கொள்வனவு செய்யவரும் மக்கள் குழப்பமடைவதுடன் விசனங்களுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் வர்த்தகர்கள், வியாபாரிகள் ஆகியோருடன் முரண்பட்டுக் கொள்கின்றனர்.
பிரதேச நுகர்வோர் உத்தியோகத்தர்கள் பெரும் வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளுர் வியாபார நிலையங்களை பரிசோதனை செய்து விலை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.