பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல்

 

-அம்பாறை நிருபர்-

கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு கலாச்சார சீர்கேடு உள்ளிட்டவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் , சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட் ,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர், உட்பட கல்முனை மாநகர பகுதியில் உள்ள அம்மன் கோயில் வீதி ,ஆர். கே. எம். வீதி ,உடையார் வீதி ,பொதுமக்கள், சிவில் பாதுகாப்பு அங்கத்தவர்கள், வர்த்தக உரிமையாளர்கள், பிரத்தியேக வகுப்பு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என இக்கலந்துரையாடலில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடுதல் பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தல் சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்திற்கு பங்கம் விளைவித்தல் தான்தொன்றித்தனமாக வாகன தரிப்பு செய்தல் வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளை பிரதான வீதியின் நடைபாதையில் காட்சிப்படுத்துவதை தவிர்த்தல் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுதல் கல்மனை மாநகரப் பகுதியில் மீண்டும் வழமை போன்று ஒரு வழிப்பாதையை மீண்டும் உருவாக்குதல் நீர் தங்கி காணப்படும் வீதிகளை இனங்கண்டு சீர் செய்தல் கலாச்சார சீரழிவுகளை தடுப்பத்கான பொறிமுறைகள் கட்டாக்காலி மாடகள் நாய்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்டவைகள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

மேலும் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு குறித்த நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்