தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து ஹட்டன் மற்றும் ஹட்டனில் இருந்து குறுகிய தூரத்திற்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து சேவைகள் சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள வட்டவளைப் பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது,
இதில் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் சென்றது, நடத்துனர் உரிமம் இல்லாமல் பேருந்துகளில் பயணிப்பவர்களிடமிருந்து பணம் பெற்றது, பயணிகள் அனுமதிச் சீட்டு இல்லாமல் பேருந்துகளை இயக்கியது, பயணிகள் போக்குவரத்து அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைக்கு மாறாக வேறு பாதைகளில் பேருந்துகளை இயக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பல சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமிருந்து 207,000 ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டது, என மத்திய மாகாண சாலைப் போக்குவரத்து அதிகாரசபையின் சோதனைப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பி.எஸ்.டி.பி. விஜேசிங்க தெரிவித்தார்.
பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீபாவளி பண்டிகை முடியும் வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று திரு. விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
அத்துடன் பண்டிகைக் காலத்தில் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் அறவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.