
பேராதனையில் வன விலங்குகளை வேட்டையாடிய அறுவர் கைது
கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடியதாக கூறப்படும் ஆறு சந்தேக நபர்கள் பேராதனை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவத்தகம பிரதேசத்தை சேர்ந்த 28 முதல் 71 வயதுக்குட்பட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
யஹலதென்ன பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்யதுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பேராதனை பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர், மாவத்தகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரது வீட்டிலிருந்து வேட்டை துப்பாக்கி, ரிவோல்வர் ரக துப்பாக்கி, இராணுவ சீருடைகள், கைவிலங்குகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை மற்றும் மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.