பெண் குழந்தை பெற்றதால் கழிவறைக்குள் அடைத்த கணவன்: கழிவு நீர் குடித்து உயிர் வாழ்ந்த மனைவி

இந்தியாவில் இரண்டு பெண் குழந்தை பிறந்ததால் தனது மனைவியை கழிவறையில் அடைத்து வைத்து தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஆர்டிசி டெப்போவில் ஹோம் கார்டாக பணி புரிந்து வரும் சானு என்பவருக்கும் சபீஹா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது கணவர் சானுவுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதால் மனைவியை சித்திரவதை செய்துள்ளார். பின்னர் சபீஹா மீண்டும் கர்ப்பமான நிலையில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சபீஹாவுக்கு சித்தரவதை அதிகரித்துள்ளது. கொடுமை அதிகரிக்கும் போதெல்லாம் சபீஹா தனது தந்தை வீட்டிற்கு சென்று விடுவார். அதன் பின் பெரியவர் பேசி இருவரையும் சமாதானம் செய்து வைப்பார்கள்.

இந்த நிலையில் தனது மனைவியை வீட்டு கழிவறையில் அடைத்து வைத்து வெளியே விடாமல் கொடுமை செய்துள்ளார். சாப்பாடு, தண்ணீர் கூட கொடுக்காமல் இந்த கொடுமை தொடர்ந்துள்ளது. கழிவறை தண்ணீரை குடித்து தான் தனது உயிரை சபீஹா காப்பாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டாருக்கு சந்தேகம் வரவே பொலிஸார் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். மனைவியை கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக சானு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.