பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை : தலிபான் அதிரடி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றொரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண் உரிமைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தாலிபான் முதல் கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் இனி சிகிச்சை பெற அனுமதி இல்லை. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும்.

இந்த செயற்பாட்டை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என, தாலிபான் அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான் ஆட்சியைப் கைப்பற்றியதில் இருந்து இங்குள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்று தாலிபான் கூறிய நிலையில் பெண்கள் கல்வி கற்க தடை, பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்ட தடை, பூங்கா மற்றும் கேளிக்கை பகுதிகளுக்கு செல்ல தடை, ஹிஜாப் இல்லாமல் பொதுவெளியில் வர தடை என பல்வேறு தடைகள் தாலிபான்கள் பெண்கள் மீது திணித்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் மீறி தாலிபான் அரசின் இதுபோன்ற உத்தரவுகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளது.