பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: சந்தேகநபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்

மணிப்பூரில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, கடந்த மே மாதம் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ள நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மெய்தி இனத்தவர் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு குகி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் ஏற்பட்ட கவலரம் தற்போது வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் இம்பாலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சிலர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனித குலத்தை வெட்கி தலைகுனியச் செய்யும் இந்த கொடூர சம்பவம் மே 4 ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளதாகவும் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் உண்மை குற்றவாளி கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2 பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது என்றும் முற்றிலும் மனிதாபிமானமற்றது எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக நோங்போக் செக்மாய் காவல்நிலையத்தில் மே 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.