நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் பதில் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

சமுர்த்தி திட்டத்தின் கீழ்  அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவில்  தகைமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என குற்றம்சுமத்தி  கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

20 இலட்சம் குடும்பங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும திட்டம்  அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, திருகோணமலை, மாத்தறை, ராகம மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்தின்  பயனாளர் தெரிவின் போது  முறைகேடு இடம்பெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க,

தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டிலில்இ தகைமையற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் குறித்து ஆராய்ந்த பின்னர்  அதனை சீர்செய்ய முடியும்.

அத்துடன்,  இந்தக் கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும்.

இதன்போது, தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.