நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தென் கொரியாவின் மேற்கு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் இருந்தபோது, விமானம் தீப்பிடித்து கடலில் விழுந்த இரண்டு விமானப்படை விமானிகளை மீட்டெடுத்த மூன்று இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் இருவருக்கு தென் கொரியாவில் நீண்டகாலம் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயிர்களைக் காப்பாற்றியதன் மூலம் “தேசிய நலனுக்கு விதிவிலக்கான பங்களிப்பை” வழங்கியதைக் கருத்தில் கொண்டு, இருவருக்கும் திறமையான தொழிலாளர்களுக்கான E-7-4 விசா வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாவது இலங்கை தொழிலாளர் ஏற்கனவே நீண்டகால வதிவிட உரிமையைப் பெற்றிருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் திகதி, சியோலுக்கு சுமார் 45 கிலோமீற்றர் தெற்கே உள்ள ஹ்வாசொங் கடற்பரப்பில் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர்கள் மீன்பிடிப் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த போர் விமானத்தின் இரண்டு விமானிகளை அவர்கள் கண்டுள்ளனர்.
படகின் தென் கொரிய கப்டனுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு விமானிகளையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது மூன்று இலங்கையர்களும் தென் கொரியாவின் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் E-9 விசா மூலம் அந்நாட்டில் பணியாற்றி வந்தனர்.
தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் இந்த விசாவின் மூலம் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் வரை மட்டுமே தங்க முடியும்.
தற்போது E-7-4 திறமையான தொழிலாளர் விசாவைப் பெற்றுள்ள இருவரும் ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்க முடியும். அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் இரண்டு ஆண்டுகளுக்கு விசாவைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். மேலும், விசா புதுப்பிப்புகளுக்கு எண்ணிக்கை வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.
இதன் மூலம், தற்காலிக தொழிலாளர் விசாவின் கீழ் இருந்த நிலையைவிட மிகவும் நிலையான வாழ்க்கையை தென் கொரியாவில் அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
“எமது சமூகத்திற்கு விசேட பங்களிப்புகளை வழங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நாட்டில் நிலையான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என தென் கொரிய நீதியமைச்சர் ஜங் சங்-ஹோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு கிடைத்த மற்றுமொரு உத்தியோகபூர்வ அங்கீகாரமாகவும் இந்த முடிவு அமைந்துள்ளது.










