தனது மனைவியின் முறையற்ற உறவின் ஆதாரத்தைச் சேகரிக்க, ரோபோட் வாக்யூம் கிளீனரைப் பயன்படுத்திய தாய்வான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், சிவில் வழக்கில் வெற்றி பெற்ற போதிலும், மனைவியின் தனியுரிமையை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
குறித்த நபர் 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவரும், அவரது மனைவியும் அவரது பெற்றோருடன் வசித்து வந்தனர். விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்கள் தங்களது இல்லத்திற்குச் செல்வது வழக்கம்
2023 செப்டம்பர் மாதம் குறித்த நபர் தனது வீட்டிற்கு சென்ற போது, அங்கு ஒரு பல் துலக்கும் தூரிகை இருப்பதை அவதானித்துள்ளார். இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், வாகன நிறுத்துமிடத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமரா காட்சிகளைப் பார்த்தபோது, அவருடைய மனைவியுடன் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்கு வருவதை அவதானித்துள்ளார்.
பின்னர், அவர் வீட்டில் இருந்த ரோபோட் வாக்யூம் கிளீனரில் ஒரு கண்காணிப்பு கமராவை பொருத்தி, அதை தன்னுடைய கைத்தொலைபேசியில் ஒரு செயலி மூலம் இணைத்து அதன் மூலமாக மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார்.
அப்போது அவரது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து குறித்த நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக ஆதாரமாக அந்தக் காட்சியை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அவரது மனைவி ஆடைகளை மாற்றுவது, தனது காதலன் எனக் கூறப்படும் நபரை அணைத்துக்கொள்வது மற்றும் ஆடையின்றி வீட்டிற்குள் நடமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதன்பிறகு, அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தனது மனைவி மற்றும் அவரது காதலர் மீது அவர் வழக்குத் தொடர்ந்தார். தம்பதியருக்கிடையிலான திருமண உரிமைகளை மீறியதாகக் கூறி, 2 மில்லியன் நியூ தாய்வான் டொலர் இழப்பீடு கோரினார்.
அவர்களது உறவு சாதாரண நட்பின் எல்லைகளைத் தாண்டியிருந்ததாக நீதிமன்றம் தீர்மானித்தது. இதையடுத்து, குறித்த நபரின் மனைவியும் மற்றும் அவருடைய காதலரும் இணைந்து, பாதிக்கப்பட்ட கணவருக்கு 500,000 நியூ தாய்வான் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், குறித்த கணவருக்கு கிடைத்த அந்த வெற்றியானது அடுத்த கட்டமாக அவர் எதிர்கொண்ட சட்ட சிக்கலுக்கு முன் பிரயோசனமற்றதாக மாறியது.
இந்த வழக்கு நிறைவடைந்த பின், குறித்த பெண் தனது கணவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் தன்னை நிர்வாணமாக காணொளி பதிவு செய்தது சட்டவிரோதமானது என்றும், அது தனியுரிமையை மீறும் செயல் என்றும் தெரிவித்து தனது கணவர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இதன்போது கணவர் தரப்பில், அந்த காணொளி ஆதாரத்திற்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, நீதிமன்றம் அதை நிராகரித்தது. திருமணத்தில் தம்பதியினருக்கிடையில் சட்டங்கள் உரிமைகள் இருந்தாலும், திருமண சட்டத்தில் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறும் சட்டம் இல்லை என்றும், கணவரான குறித்த நபர் இவ்வாறு காணொளி பதிவு செய்தது சட்டவிரோமானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இறுதியில்இ தனிப்பட்ட காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்த குற்றத்திற்காக அந்த நபருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனையும், 150,000 நியூ தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் அல்லது நெருக்கமான தகவல்களை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வது அல்லது வெளியிடுவது குற்றமாகும்.
இதற்காக அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 300,000 நியூ தாய்வான் டொலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.










