திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் பொலிசாரால் கைது

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் நேற்று சனிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் நேற்று அதிகாலை நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியமை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த யாழ் மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியரின் தங்கச் சங்கிலி அறுத்தமை, அதே தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் தங்க சங்கிலியினையும் அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து திருடியமை போன்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபNர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், நகைகள் பெருமளவு பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து காணப்படுவதாகவும், பல தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதிலும் தப்பிஓட முயற்சி செய்திருந்தவர் எனவும் தெரியவருகின்றது.

கடந்த 26ஆம் திகதி யாழ். போதனா வைத்திய சாலையில் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளவாலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.