
ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயார்: சீனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதியாக உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கப் பொருட்களைக் குறிவைத்துக் கூடுதல் ‘எதிர் நடவடிக்கைகள்’ ஏற்படுத்தப்படும் எனச் சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தல் விடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள சீன வர்த்தக அமைச்சு, அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தினால் சீனா இறுதிவரை அதை எதிர்த்துப் போராடும் என்றும் கூறியுள்ளது.
புதிய வரிகள், சீனாவிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் சில அமெரிக்க நிறுவனங்களை 104 சதவீத வரியை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கிறது.
அதேநேரம், உலகப் பொருளாதாரம் சமநிலையற்று காணப்படும் நிலையில், டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் பெரும்பாலான ஆசியச் சந்தைகள் உயர்ந்த நிலையில் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.
எனினும், தாய்வானின் பங்குச் சந்தை மேலும் 4 சதவீதம் சரிவைக் கண்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.