டெலோ கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விந்தன்
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பதாக டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி,
தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று செயற்படுவது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் முகமாகத் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்துப் பயணிப்பது தொடர்பான விடயங்கள் குறித்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்குத் தலைமை குழு தீர்மானித்துள்ளதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய கூட்டத்தின் போது கட்சியின் உள்ளக விடயங்களை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்து விந்தன் கனகரத்தினம் மீது உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி அவரிடம் இருந்து விளக்கம் கோருவதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.