டிக்டொக் செயலியை தடை செய்ய உத்தேசித்துள்ள அரசு
அல்பேனிய அரசாங்கம், தமது நாட்டினுள் ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி முதல் தடை செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், உத்தேச தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கங்களைக் கோரி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனிடமோ அவரது கொலையுடன் தொடர்புடைய நபரிடமோ டிக்டொக் கணக்குகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உளவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, டிக்டொக் அச்சுறுத்தல் மிக்க செயலி என அல்பேனிய பிரதமர் எடி ரமா குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக டிக்டொக் செயலியை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.