சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயல் – வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை விசாரிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த பதினொன்றரை ஆண்டுகளில் (2014 – 30 ஏப்ரல் 2025) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக ஒரு இலட்சத்து ஏழாயிரத்து அறுபத்து மூன்று (107,663) முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும், அவற்றில் 43 சதவீதம் விசாரிக்கப்படவில்லை.

அதன்படி, பெறப்பட்ட முறைப்பாடுகளில் 46,813 புகார்கள் விசாரிக்கப்படவில்லை. இதன் விளைவாக, சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

அத்தோடு துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்ற முடியவில்லை.

அனைத்து விசாரணை வழக்குகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தல், துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பெறுதல் மற்றும் அவற்றை சரியான நேரத்தில் சட்ட அதிகாரிகளுக்கு அனுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கும் இதனால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு நாயகத்தால் வெளியிடப்பட்ட வருடாந்திர கணக்காய்வு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.