சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய இந்தியாவிற்கு வர முயற்சிக்கிறார் – வைகோ

-மன்னார் நிருபர்-

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது, என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் ம.தி.மு.க கட்சி பிரமுகரின் திருமண விழாவில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசினார்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர் இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்சே கொண்டாடியபோது எனக்கு தெரியும், இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று சொன்னது இன்று நடந்துள்ளதாக பேசினார்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது.

ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்; நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

எனவே மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172