ஒன்லைன் விளையாட்டுகள் (Online Gaming) ஊடாக சிறுவர்களின் நடத்தை மற்றும் உளவியல் ரீதியில் ஏற்படக்கூடிய பாரதூரமான தாக்கங்கள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவிக்கையில்,
நவீன ஒன்லைன் விளையாட்டுகள் உலகெங்கிலும் உள்ள அறிமுகமில்லாத நபர்களுடன் நிகழ்நேரத்தில் உரையாடும் வசதியைக் கொண்டுள்ளன. நீண்ட நேரம் இவ்வாறான விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள், தெரியாத நபர்களிடம் தமது தனிப்பட்ட பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், உணர்ச்சி ரீதியாக அவர்கள் மேல் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இது உணர்திறன் மிக்க தகவல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் பகிரப்படும் அபாயத்தை தோற்றுவிப்பதாக, அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை விளையாட்டுகளில் உள்ள ‘ரிவார்டு’ (Reward) முறைமைகள் சிறுவர்களை அடிமையாக்குவதுடன், அவை சூதாட்ட குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.
பெற்றோரின் கடன் அட்டைகளை (Credit Cards) பயன்படுத்தி, அனுமதியின்றி 4 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரை விளையாட்டுகளுக்காக செலவு செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் போது சிறுவர்கள் ஆக்ரோஷமாகவும், மன உளைச்சலுக்கும் உள்ளாவதாகப் பெற்றோர்கள் அவதானித்துள்ளனர்.
விளையாட்டுகளின் உள்ளடக்கங்கள் மற்றும் வயதுப் பொருத்தப்பாட்டைக் கண்டறிய PEGI போன்ற வயது மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ‘Parental Controls’ மற்றும் திரை நேர முகாமைத்துவம் (Screen-time management) மூலம் பிள்ளைகளின் ஒன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.