சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பொருட்கள், வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் குறைந்த மதிப்பீட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வர்த்தகர்கள் விற்பனைக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொருட்களை அடையாளம் காணும் நோக்கில் அதிகாரிகள் தற்போது “பின்னோக்கு தணிக்கை” (Backward Audit) நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் அவர், மறு விற்பனைக்காக கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் முறையான விலைப்பட்டியல் (Invoice) பெற்றுக்கொள்ள வேண்டும் என வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த விலைப்பட்டியலில் பொருளின் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரின் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருட்கள் உரிய சுங்க வரி செலுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா மற்றும் அவற்றின் இறக்குமதி மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் வரை பொருட்களின் விநியோகச் சங்கிலியைப் பின்னோக்கி ஆராய்வதே இந்த தணிக்கை நடவடிக்கையாகும் என பிரதி அமைச்சர் விளக்கியுள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகள், குறிப்பாக “டம்பிங்” (Dumping) தொடர்பான சந்தேகங்கள் குறித்து கைத்தொழில் அமைச்சிடம் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “On Approval” Bill எனப்படும் எந்தவொரு ஆவணமும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதல்ல என்றும், அவ்வாறான ஆவணங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகளை இலக்காகக் கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் நாடளாவிய ரீதியில் 108 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை மற்றும் சந்தை ஆய்வு நடவடிக்கைகளின்போது, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டன.
சோதனை செய்யப்பட்ட 84 வர்த்தக நிலையங்களால், தங்களிடம் காணப்பட்ட பொருட்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் முறையான பற்றுச்சீட்டுகள், பில்கள் அல்லது விலைப்பட்டியல்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க முடியவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகளின்போது சருமத்தை வெளிறச் செய்யும் கிரீம்கள், முகம் மற்றும் உடலுக்கான அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், தலைமுடி பராமரிப்புப் பொருட்கள், விளையாட்டு காலணிகள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.










