சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஜனாதிபதி

சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் இழக்கப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாகத் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது.

தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். அந்த நம்பிக்கை சிதைந்து போவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்த காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.